Thursday 20 June 2013

உத்தரகாண்ட் வெள்ளத்தில் கிராமம் அடியோடு அழிந்தது: சாவு எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும்

உத்தரகாண்ட் வெள்ளத்தில் கிராமம் அடியோடு அழிந்தது: சாவு எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும்


புதுடெல்லி, ஜூன். 20- 
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இமயமலையே அதிரும் வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 
கேதார்நாத் பள்ளத்தாக்கு பகுதியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கரையோரத்தில் இருந்த வீடுகள் அடுக்கு மாடி கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன.
மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கேதாநாத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து புனித யாத்திரை சென்றனர். அவர்களும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.சாலைகள் துண்டிக்கப்பட்டதால் அவர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். 
வெளியூர் சுற்றுலாப் பயணிகளை மீட்டு அழைத்து வருவதற்காக 13 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மலைப்பகுதியில் சிக்கிக் கொண்டவர்கள் அதில் மீட்கப்பட்டு தலைநகர் டேராடூன் அழைத்து வரப்படுகிறார்கள். 
அலக்நந்தா உள்ளிட்ட ஆறுகளில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுவரை 500 சாலைகள், 170 பாலங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. மீட்பு பணியில் துணை ராணுவப்படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆயிரக்கணக்கான உள்ளூர் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
தொடர்ந்து அங்கு மழை நீடிப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் மாய மானவர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இதனால் சாவு எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும் என்று அஞ்சப்படுகிறது. 
மாநில அரசு சாவு எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. மீட்பு குழுவினர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் சாவு எண்ணிக்கை தெரிய வருகிறது. 
கேதார் கட்டி என்ற இடத்தில் ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமம் வெள்ளத்தில் அடியோடு அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதில் வசித்த மக்கள் கதி என்ன வென்று தெரியவில்லை. கிராமம் உருக்குலைந்து கிடக்கிறது. 
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநில வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட்டனர். மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங்கும் வெள்ளம் பாதித்த பகுதிகளை தனியாக பார்வையிட்டார். 
மாநில முதல்-மந்திரி விஜய் பருகுணாவை டேராடூனில் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசினார். மீட்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விடுவது பற்றி ஆலோசனை நடத்தினார்கள். 
பின்னர் நிருபர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ரூ.1000 கோடி நிவாரண உதவி அளிக்கப்படும். இதில் ரூ.145 கோடி உடனடியாக வழங்கப்படும் என்றார். வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், வீடு இழந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், வீடு சேதம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். 
உத்தரகாண்டில் சமோலி மற்றும் ருத்ர பிரயாக் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி இருந்த 2700 பக்தர்களும், உள்ளுரைச் சேர்ந்தவர்களும் மீட்கப்பட்டனர். கோவில் நகரமான பத்ரிநாத் இன்னும் 12 ஆயிரம் பக்தர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
மழை வெள்ளத்தில் கேதார்நாத் பள்ளத்தாக்கு பகுதி முழுமையாக சேதம் அடைந்து விட்டது. கேதார்நாத் கோவிலையும் வெள்ளம் தாக்கியது. கோவில் அருகே இருந்த பல்வேறு கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், கேதார்நாத் கோவில் மட்டும் எந்த சேதமும் இல்லாமல் தப்பியது. அதன் சுற்றுச்சுவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளது. 
வெள்ளம் ஏற்பட்டபோது 300 பக்தர்கள் கோவிலுக்குள் புகுந்து உயிர் தப்பினார்கள். ஆனால் கோவிலுக்கு வெளியே இருந்தவர்களும், பள்ளத்தாக்கு பகுதியில் இருந்தவர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். கோவிலைச் சுற்றிலும் இடிபாடுகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்றி கோவிலை சீரமைக்க ஒரு வருடம் ஆகும். எனவே கோவில் ஓராண்டு மூடப்படும். பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள இயலாது என்று முதல்-மந்திரி விஜய் பகுகுணா கூறினார். 
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் கார்வால் பகுதியில் ராணுவ பயிற்சி மையமும், துணை ராணுவ படையான தேசிய பாதுகாப்பு படையின் பயிற்சி மையமும் மழை வெள்ளத்தில் சேதம் அடைந்துள்ளது. ரூ.100 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு படை இயக்குனர் எஸ்.பந்தோபாத்யாய் தெரிவித்தார்.

No comments:

Post a Comment