பிணங்களை எரிக்க 50 டன் மரங்கள் ; ஒரே இடத்தில் தகனம் செய்ய முடிவு:
டேராடூன்: சமீபத்திய வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரம் பேர் வரை இருக்கலாம் என மாநில பேரிடர் மேலாண் துறை அமைச்சர் யஸ்பால் ஆரியா கூறியுள்ளார். பத்ரிநாத்தில் மட்டும் இன்னும் 10 ஆயிரம் பேர் வரை மீட்கப்படாமல் இருக்கின்றனர் என தெரிகிறது. இன்னும் 3 முதல் 4 நாட்கள் வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக எரித்து தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நேரத்தில் பிரேத பரிசோதனை செய்ய வாய்ப்பில்லை என்றும். பலரது உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண முடியவில்லை. இவர்களின் புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் அரசு இணையதளத்தில் அப்லோடு செய்யப்படும் என மாநில அரசு தெரிவித்ள்ளது. இந்த பிணங்களை கேதார்நாத்தில் ஒரே இடத்தில் தகனம் செய்ய 50 டன் மரங்கள் மற்றும் நெய் பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என உத்தரகண்ட் மாநில முதல்வர் விஜய்பகுகுணா நேற்றுதெரிவித்திருந்தார். இன்று மட்டும் 124 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் இது வரை 82 ஆயிரம் பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அதிகாரப்பூர்வமாக 680 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மழை பெய்து வருவதால் கேதார்நாத், பத்ரிநாத், டேராடூன், ரிஷிகேஷி ஆகிய பகுதிகளில் இன்று மீட்பு நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெலிகாப்டர் மூலம் நடக்கும் மீட்புப் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹனுமன் ஜெட்டி, ஜிங்குள் ஜெட்டி பகுதிகளில் பலர் இன்னும் தவித்து வருவதாக தெரிய வந்துள்ளது. தற்போது மழை மற்றும் மோசமான வானிலை நிலவுவதால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
துல்லியமாக சொல்ல முடியவில்லை : வெள்ள சேத விவரம் குறித்து பேரிடர் மேலாண் துறை அமைச்சர் யஸ்பால் ஆரியா கூறுகையில்; தரை மற்றும் வான் வழி மீட்பு பணியில் நேற்று மட்டும் 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 10 ஆயிரம் பேர் தவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரம் இருக்கும் என தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். துல்லியமாக சொல்ல முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
பி.எஸ்.என்.எல். இலவச தொலைபேசி: வெள்ளம் பாதித்த பகுதிகளில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டோர் அங்கிருந்தபடி தங்களின் உறவினர்களை கட்டணமின்றி இலவசமாக போனில் தொடர்பு கொண்டு பேசிக்கொள்ள முடியும். மேலும் சாட்டிலைட் போன்களும் நிறுவப்பட்டுள்ளன.
பிணங்களுக்கு மத்தியில் வாழ்ந்தோம்: நேற்று தமிழகம் திரும்பிய பயணிகள் நிருபர்களிடம் பேசுகையில்; திடீரென மழை பெய்து எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஒடியதை பார்க்க முடிந்தது. எங்கு செல்வது என்றே தெரியவில்லை. நாலாபுறமும் சிதறி ஓடினோம். எங்கள் கண் முன்னே உறவினர் தண்ணீரில் இழுத்து செல்வதை பார்த்தோம். 5 நாட்கள் பெரும் அவதிப்பட்டோம். மின்சாரம் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை. உணவு இல்லை. சிலர் பட்டினியால் இறந்து போயினர். நாங்கள் இரவு , பகல் முழுவதும் கடும் குளிரில் பெரும் துயரப்பட்டோம். எங்களை சுற்றி பிணங்கள் கிடந்தன. பிணங்களுக்கு மத்தியில் வாழ்ந்தோம் என்றனர் கண்ணீருடன் .
வெள்ள அபாய எச்சரிக்கை: இதற்கிடையில் மேலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் , கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர், மேலும் உத்தரபிரதேச மாநில மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
பிணங்களை எரிக்க 50 டன் மரங்கள்: வெள்ளத்தில் பலியானவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது. நேற்று வெளியிடப்பட்டுள்ள தகவலில் 1000 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.இந்நிலையில் பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அங்கேயே தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக அம்மாநில கர்வால் மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டின் பேரில் வெள்ளத்தில் பல்வேறு இடங்களில் பலியான உடல்கள் கேதார்நாத் கொண்டுவரப்பட்டு ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்ய 50 டன் மரங்கள், நெய் முதலானவைகள் பயன்படுத்தப்பட உள்ளன. இன்று இறுதி சடங்குகள் நடக்கின்றன.
No comments:
Post a Comment