Monday, 1 July 2013

முகுல் வாஸ்னிக்குடன் தங்கபாலு ஆதரவாளர்கள் சந்திப்பு: ஞானதேசிகன் எதிர்ப்பு

 முகுல் வாஸ்னிக்குடன் தங்கபாலு ஆதரவாளர்கள் சந்திப்பு: ஞானதேசிகன் எதிர்ப்பு


தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை, நேற்று முன்தினம் இரவு, சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் தலைவர் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் 50 பேர், தனியாக சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள், "தங்கபாலு நியமித்த, 18 மாவட்டத் தலைவர்களை மாற்றக் கூடாது' என, வலியுறுத்தினர்.

முகுல் வாஸ்னிக்கை, தனியாக சந்தித்து பேச, எந்த கோஷ்டிக்கும், அனுமதிக்காத பட்சத்தில், தங்கபாலு ஆதரவாளர்கள் மட்டும் சந்தித்து பேசியதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர், ஞானதேசிகன் எதிர்ப்பு தெரிவித்தார். முகுல் வாஸ்னிக் நேற்று முன்தினம், சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மதியம், நிருபர்கள் சந்திப்பு முடிந்த பின், மாலையில், ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் நினைவிடம், மூப்பனார் நினைவிடத்துக்குச் சென்று, மரியாதை செலுத்தினார். இரவு, அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். தங்கபாலுவின் ஆதரவாளர்கள், 50 பேர், சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். அவர்கள் அனைவரும், 10 குழுக்களாக பிரிந்து கொண்டு, முகுல் வாஸ்னிக்கை சந்திக்க முற்பட்டனர். இதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மற்றும் கட்சி பிரமுகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முகுல் வாஸ்னிக்கிடம், தங்கபாலு ஆதரவாளர்கள் கூறியதாவது: கடந்த, 1969ம் ஆண்டிலிருந்து, காங்கிரஸ் கட்சியை விட்டு, வெளியேறாமல் ஒரே கட்சியில் இருப்பவர் தங்கபாலு. அவருடைய ஆதரவாளர்களுக்கு நிர்வாகிகள் பட்டியலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர், மாநிலத் தலைவராக பணியாற்றிய போது, நியமிக்கப்பட்ட, 18 மாவட்டத் தலைவர்களையும், ஆறு ஆண்டுகள் நீடிக்க விட வேண்டும்; அவர்களை மாற்றக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். தங்கபாலு ஆதரவாளர்கள், முகுல் வாஸ்னிக்கை தனியாக சந்தித்து பேசிய போது, ஞானதேசிகன் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழக இளைஞர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் லிஜு, "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட தமிழக இளைஞர் காங்கிரஸ் யுவராஜா ஆகிய இருவரும், முகுல் வாஸ்னிக்கை சந்தித்து பேசினர். அப்போது, இளைஞர் காங்கிரஸ் செயல்பாடுகள் குறித்தும், யுவராஜா, "சஸ்பெண்ட்' விவகாரம் குறித்தும் விசாரித்தார். யுவராஜாவிடம், இளைஞர் காங்கிரஸ் விவகாரங்களை, தன் இ-மெயிலுக்கு தெரிவிக்கும்படி முகுல் வாஸ்னிக் கேட்டுக் கொண்டார்.


சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., வேலூர் ஞானசேகரன் பேசியதாவது: குலாம் நபி ஆசாத்துக்கு தங்கபாலு நெருக்கமானவராக இருந்தும், அவரால் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட முடியவில்லை. ஞானதேசிகனும் பட்டியலைத் தயாரித்து, குலாம் நபி ஆசாத்திடம் கொடுத்தார். அவரும் சோனியாவின் கையெழுத்து பெறுவதற்கு அனுப்பி வைத்துள்ளார். பட்டியல் வெளிவரவில்லை. ஞானதேசிகன், தனி ஆளாகச் செயல்படுகிறார். நிர்வாகிகள் இல்லாமல் கட்சியை வளர்க்க முடியாது. 12 ஆண்டுகள் நிர்வாகிகள் நியமிக்கவில்லை. எனவே இன்னும், 12 நாட்களுக்குள் நிர்வாகிகளை நியமிக்க, முகுல் வாஸ்னிக் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதை, இப்போதே தொண்டர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கடைசி நேரத்தில், இந்த கட்சியுடன் கூட்டணி என்ற முடிவு எடுப்பதால் அந்த கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், ஒருங்கிணைப்பு இல்லாமல் போய்விடுகிறது. கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்றால் தனித்து போட்டியிடலாம். ராகுல் பிரதமராவதற்கு எம்.பி.,க்கள் வேண்டும் என்றால், தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தாக வேண்டும். யாருடன் கூட்டணி என்பதை முதலில் சொல்லி விடுங்கள். கடைசி நேரத்தில் கூட்டணி வைத்தால், தொண்டர்கள் காலை வாரி விடுவர். அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, கட்சி தலைமை முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்

No comments:

Post a Comment