Monday, 1 July 2013

"எதிர்க்கட்சி தலைவர் பதவி போனாலும் கவலையில்லை...': விஜயகாந்த் ஆதரவாளர்கள் கருத்து

"எதிர்க்கட்சி தலைவர் பதவி போனாலும் கவலையில்லை...': விஜயகாந்த் ஆதரவாளர்கள் கருத்து


"எதிர்க்கட்சித் தலைவருக்கான சலுகைகளை பயன்படுத்தாத போது, அந்த பதவி போனாலும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு கவலையில்லை' என, அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேரும், அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்தனர். அவர்களை, "சஸ்பெண்ட்' செய்து விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். வரும், 10ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்கும்படி, அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.ஆனால், தங்களை நிரந்தரமாக, கட்சியில் இருந்து நீக்கும்படி, ஏழு எம்.எல்.ஏ.,க்களும் கிண்டலாகக் கூறி வருகின்றனர். அவ்வாறு, நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்கும் பட்சத்தில், எந்த கட்சியையும் சாராத எம்.எல்.ஏ.,வாக இவர்கள், மீதியுள்ள, மூன்று ஆண்டுகளுக்கும் பதவியில் நீடிக்க வாய்ப்புள்ளது.அதே நேரத்தில், தே.மு.தி.க.,வின் பலம், சட்டசபையில், 22 ஆகக் குறைய வாய்ப்புள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., ஆதரவு தராத கோபத்தில் உள்ள தி.மு.க., தலைமை, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முயற்சிக்கும் என, கூறப்படுகிறது.ஆனால், "எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோவதைப் பற்றி, விஜயகாந்துக்கு எந்த கவலையும் இல்லை' என, அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து விஜயகாந்துக்கு நெருக்கமான தே.மு.தி.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சென்னை, தலைமை செயலகத்தில், எதிர்க்கட்சித் தலைவருக்கு விசாலமான அறை இருந்தது. சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும் நாட்களில், இதை தே.மு.தி.க.,வின், 28 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்த விஜயகாந்த் பயன்படுத்தினார்.ஆனால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், விடுமுறை நாளில், இந்த அறையை பாதியாகப் பிரித்து, காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு அந்த அறையை, எதிர்க்கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.,க்களும் பயன்படுத்தாததால் பூட்டியே கிடக்கிறது. அதேபோல, சட்டசபையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறி, கடந்தாண்டு சட்டசபையில் இருந்து, 10 நாட்களுக்கு விஜயகாந்த், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அப்போது, அவரிடம் இருந்த எதிர்க்கட்சித் தலைவருக்கான, சிவப்பு சைரன் விளக்கு பொருத்திய, "இனோவா கார்' பறிமுதல் செய்யப்பட்டது.ஆனால், "சஸ்பெண்ட்' நடவடிக்கை முடிவுக்கு வந்த பிறகும், காரை திரும்பப் பெறாமல், தன் சொந்த காரையே விஜயகாந்த் பயன்படுத்தி வருகிறார். மேலும், சட்டசபையில் நடந்த பிரச்னைக்கு பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் அமர்வதையே விஜயகாந்த் விரும்பவில்லை. வெளியில் செல்லும் போது தனக்குரிய போலீஸ் பாதுகாப்பையும் அவர் பயன்படுத்துவதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவி மேல், ஒரு போதும் அவருக்கு ஆசை கிடையாது. அதனால், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை குறைவதால், தன் பதவி பறிபோவது பற்றி அவர் கவலைப்படவில்லை. "கட்சியில் மதிப்பில்லை' என, சாக்கு சொல்லி, ஏழு பேர் துரோகம் செய்துள்ளனர். தைரியம் இருந்தால், ஏழு பேரும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.இவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என விரும்பும் விஜயகாந்த், அதற்கான நடவடிக்கைகளை இப்போது துவங்கியுள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment