தீவிரவாத செயல்கள் அதிகரிப்பதற்கு மத்திய அரசே காரணம்: மம்தா சாடல்
லால்கர்க் : ""மாவோயிஸ்ட் தாக்குதல் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிப்பதற்கு, மத்திய அரசு வலுவிழந்து இருப்பதே காரணம்,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்கத்தில், மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில், லால்கர்க் என்ற இடத்தில், பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரசாரத்தில் பங்கேற்று, மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
என்னையும், திரிணமுல் காங்., தலைவர்களையும் தீர்த்து கட்டும் நோக்கில், மாவோயிஸ்ட்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த மிரட்டலை கண்டு நான் பயப்படவில்லை. மகாபோதி கோவிலில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட்டில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதல்களை பார்த்து, அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற தாக்குதல் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க, மத்திய அரசு, எவ்வித தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு செயலற்றதாக உள்ளது. இது போன்ற செயல்கள் எல்லாம், திட்டமிட்டு தான் நடத்தப்படுகின்றன.
இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க, மத்திய அரசு தவறி விட்டது. இந்த சண்டையில், நம் வீரர்கள் உயிர் இழக்கின்றனர். ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து, மாவோயிஸ்ட்கள், மேற்கு வங்கத்தில் ஊடுருவுகின்றனர். இங்கு இவர்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். வன்முறை எந்த ரூபத்தில் வந்தாலும், அதை பொறுத்து கொள்ள முடியாது. ஜங்கல்மகாலில், மாவோயிஸ்ட்டுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து கொண்டு செயல்படுகின்றனர். என்னையும், திரிணமுல் தலைவர்களையும் குறி வைத்து, தற்கொலைப் படையை அமைத்துள்ளனர்.இவ்வாறு, மம்தா பானர்ஜி கூறினார்.
No comments:
Post a Comment